Wednesday 6 July, 2011

கம்பனுக்கு ஒரு கேள்வி





















ராப்பகலாய் பாட்டெழுதி
ராசகவி ஆனவனே
தமிழென்னும் கடலுக்குள்
தரைவரைக்கும் போனவனே

சூத்திரம்போல பாட்டெழுதும்
சுகக்கவியே நான் உனக்கு
மனுஷப்பூ மாலையிட்டா
மரியாதை ஆகாது

இந்திர லோகத்து
இளசுளை தேவரெல்லாம்
மோகக் கிறுக்கெடுத்து
முந்நூறு முத்தமிட
முத்தமிடுங் கூத்துகளை
மூத்தநிலா பார்த்துவிட

இட்ட முத்தத்து
எச்சில் கரையழிக்க
வட்டில் அமுதெடுத்து
வாய்கழுவ வாய்கழுவ

வாய்கழுவும் அமுதமெல்லாம்
வாய்கால் வழியோடி
கற்பக மரங்களுக்கு
கால்கழுவக் கால் கழுவ

கால்கழுவும் சுகவெறியில்
கற்பக மரமபூக்க
அந்த பூவையெல்லாம்
அரும்போடு கிள்ளிவந்து
வானவில்லில் நார்கிழித்து
வகையாக மாலைகட்டி
சொல்லரசே நான் உனக்குச்
சூட்டிவிட வேணுமல்லோ

நான் உனக்கு
மனுஷப்பூ மாலையிட்டா
மரியாதை ஆகாது

சொல்லுக்குள் வாக்கியத்தை
சுருக்கிவச்ச கவிப்புலவா

உன்னை இதுவரைக்கும்
ஒருகேள்வி கேட்கலையா

தினம்வடிச்ச கண்ணீரால்
தீவுக்குள் கடல்வளர்த்து

அசோகவனத்திருந்து சீதை
அழுதாளே அவளை நீ
கண்ணால் பார்க்கலையே
கவிமட்டும் சொன்னாயே
அம்பிகா பதியிழந்து
அமரா வதியுனது
காதுக்குள் அழுதாளே

ஊமை வெயிலுக்கே
உருகிவிட்ட வெண்ணெய் நீ
அக்கினி மழையிலே
அடடாவோ உருகலையே

கடவுள் காதலைநீ
கதைகதையாய் பாடினையே
மனுஷக் காதலைநீ
மரியாதை செய்யலையே

இந்தக்கேள்வியை, ஓ
எங்குபோய் நான்கேட்க
பாடிவச்ச கவிஇல்லே
படிச்சவுக சொல்லுங்க

நன்றி
- வைரமுத்து