Sunday 22 March, 2009

சென்ரியு கவிதைகள்

நாற்காலி ஆசை
யாரைத்தான் விட்டது...
நாற்காலியில் பொம்மைகள்

கர்த்தர்
நம்மைக் காப்பாற்றுவார்...
சிலுவையில் கர்த்தர்

எப்பொழுதும் அலங்காரத்துடன்
வாழ்கிறார்கள் திருநங்கைகள்...
சாயம் போன வாழ்க்கை

ஆசிரியரின் பாடத்தில் அசோகன்
மாணவனின் மனதில்...
மரம் வெட்டும் தந்தை

தமிழ் நாட்டில்
சாதிக்கவும் தடை
சாதி

நன்றி
- மாமதயானை (நிலாச்சாரல்)



சென்ரியூ – நகைப்பாக்கள்

பூவா தலையா?
பூ கேட்கிறாள்
விதவை
***
முதியோர்களின்
முழு நேரப்
பேச்சிலும்
இளமைக் காலம்
***
கல்லும் இருந்தது
நாயும் இருந்தது
கை உடைந்த
நேரத்தில்
***
அன்னையும்
பிதாவும்..
படித்துக் கொண்டிருக்கிறது
அனாதைக் குழந்தை
***
அதிவேகமாய் ஓடினான்
ஓட்டப் பந்தய வீரன்
அடுத்த வீட்டுப்
பெண்ணுடன்!
***
மாற்று அறுவை
சிகிச்சை செய்து
முடித்தார் மருத்துவர்
நோயாளியை மாற்றி!
***
தேர் வராத
சேரிக்குள்
தேசமே வரும்
தேர்தல் நேரம்!
*****
ஏட்டிக்குப் போட்டி பேசும் பாட்டி
இறந்த பிறகும்
மூடவில்லை வாய்!
*****
வாய்ப்பாட்டு பாடுபவனின் வயிற்றிலும்
பாட்டிலும் பசி
*****
நன்றியுள்ள நாய்
வாலை ஆட்டியது
திருடனுக்கு
*****
மனதில் எழுதுகோல்
பற்றிய கவிதை
மை தீர்ந்த பிறகும்!
*****
எந்த பனித் துளிக்குள்
ஒளிந்து கிடக்கிறது………
என் கவிதை.
*****
நிலவைப் படம் பிடிக்க
முடியாத வருத்தத்தில்
வற்றிய குளம்!
***
தெளிந்த நீரில்
முகம் பார்த்த பிறகும்…
தெளியாத மனசு
***
பாவலர்கள் எழுதி விடுவார்களோ?
பயந்து முட்புதரில்
மறையும் நிலவு
***
நிசப்தமாய் இரு
இசை கேட்கலாம்
மழை வரப்போகிறது
***
தரிசு நிலக்
காட்டில் தவறி விழுந்த
காகிதத்தில் அறுவடைக் காலக் கவிதைகள்
***
ஆயிரம் பேர்
அழைத்தாலும்
ஆகாயத்தில்தான் நிலவு.
***
பச்சைப் பசேலென
அடர்ந்த மரக்காட்டில்………
கோடாரிச் சத்தம்
***
அழகிய வண்ணத்துப்
பூச்சி பறக்கும் திசையெல்லாம்……
உடன் பறக்கும் மனசு
***
உயிரையே வைத்திருக்கிறார்கள்
குழந்தைகள்...................
உயிரில்லாத பொம்மைகளின் மேல்!
***
மருந்து மாத்திரைகள்
தீர்ந்த பிறகும். .........
தீராத நோய்
***
சீமானின் மாளிகை
இடிந்த பிறகு நன்றாகவே தெரிகின்றன........
ஏழைகளின் குடிசைகள்
***
அமைச்சருக்குப்
போட்ட துண்டு எப்படி விழுந்தது. .........
பட்ஜெட்டில்!
***
பால் காய்ச்சித்தான்
குடித்தனம் போக வேண்டும்
சாராயம் காய்ச்சுபவனும்!
***
நிறைய மிட்டாய்கள்
வாங்கித்தரும் தாத்தாவிற்கு
பாவம் பல்லே இல்லை!
***
தமிழ் நாட்டில்
சாதிக்கவும் தடை
சாதி
***
யாருடைய ஆசியோ?
உயர்ந்து கொண்டே
போகிறது விலைவாசி
***
இல்லாதவனின்
உலக அனுபவம்
வெங்காயம்
***
சுருக்கமாகப்
பேசி முடித்தார்
விரிவுரையாளர்!

நன்றி
- மாமதயானை (நிலாச்சாரல்)

ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள்
- ரூசோ

பிறை நிலாவில்
பெளர்ணமியை சூட்டுகிறாய்
உன் நெற்றியில் குங்குமம்!

***

சூரியன் கூட
ஓவியம் வரைகிறது
உன் நிழல்!

***

இரவு வானத்தைப் போல
என் இதயம்
எத்தனை பொத்தல்கள்
உன்னால்..!

கவிதை


காதல்
- ரூசோ


உன் பாதச் சுவடுகள்
பதிந்த மணல் கொண்டும்
உன் விரல் பட்ட
மரக்கிளைகள் கொண்டும்
உன் வெட்கத்தில்
வழிந்த வர்ணம் கொண்டும்
நமக்கான வீட்டைக் கட்டுவோம்...
அதில்
காற்றும் புகாத அளவுக்கு
காதலை நிரப்பி வைப்போம்...!